|
click here to listen to First paragraph
நினைக்கும்போதெல்லாம் என்னை ஆச்சரியப்பட வைப்பது அம்மாவின் குடும்ப நிர்வாகம். சம்பாதித்தவர் அப்பா மட்டுமே. அப்பாவின் ஒரு சம்பளத்தில் எட்டு குழந்தைகளை நன்றாகப் படிக்க வைத்து வாழ்க்கையில் முன்னேற வைத்த பெருமை முழுவதும் அம்மாவையே சேரும். அம்மா எங்களை வளர்த்தது ஒரு Magic என்றுதான் சொல்ல வேண்டும். இத்தனைக்கும் நாங்கள் யாருமே இலவசப் பள்ளிகளில் படிக்கவில்லை.. கண்டிப்பான ஆனால் பாசமான அம்மா. அம்மா வகுத்த விதிகளை இப்போதும் நாங்கள் கடைப் பிடிக்கின்றோம். சில உதாரணங்கள் - சாப்பிட்ட தட்டு, காபி குடித்த டம்ளர் எல்லாவற்றையும் அவரவரே அலம்பி வைக்க வேண்டும், வார நாளானாலும், விடுமுறை நாளானாலும் குளித்து விட்டுத்தான் சாப்பிட வேண்டும். வாரத்திற்கொரு நாள் கண்டிப்பாக எண்ணைக்குளியல் உண்டு. விடுமுறை நாட்களில் இரண்டு வேளையும் வார நாட்களில் இரவு உணவும் எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்துதான் சாப்பிட வேண்டும்.அவரவர் தட்டை அவரவர் அலம்பி எடுத்து கை கால் கழுவி விட்டுத்தான் சாப்பிட உட்கார வேண்டும். தட்டில் அம்மா போடுவதை உண்ண வேண்டும். இது பிடிக்கும், அது பிடிக்காது என்ற வார்த்தைகளுக்கு இடமே கிடையாது. தட்டில் எதையும் மிச்சம் வைக்கக் கூடாது. எந்த சாப்பிடும் பொருளானாலும் எல்லோருக்கும் சமமாகப் பிரித்துதான் சாப்பிட வேண்டும். மாலை நேரத்தில் தனியாக வெளியில் செல்லக் கூடாது. தம்பியையோ தங்கையையோ கூட அழைத்துச் செல்ல வேண்டும். எங்கு சென்றாலும் இருட்டுவதற்குள் வீட்டிற்குத் திரும்ப வேண்டும். எங்கள் எல்லோருக்கும் வீட்டு வேலைகளைப் பிரித்துத்தந்திருந்தாள் அம்மா. அவற்றை சரியாகச் செய்ய வேண்டும். இதைப் படிக்கும் நீங்கள் நான் ஏதோ சீர்திருத்தப் பள்ளி மாதிரி ஒரு இடத்தில வளர்ந்தேன் என்று நினைக்கலாம். அது மிகவும் தவறான எண்ணம். அம்மாவிற்கு எங்கள் படிப்பின் மீது மிகுந்த அக்கறை உண்டு. வீட்டு வேலைகளையும் ஒழுங்காகச் செய்ய வேண்டும் படிப்பிலும் சோடை போகக் கூடாது அதே சமயம் எங்களுக்கு காலையில் சீக்கிரம் எழுந்திருக்க வேண்டுமென்றால் அம்மா எங்களுக்கு முன்பே எழுந்து காபியோ டீயோ தயாரிப்பாள் வளர்ந்தபின்தான் நான் எவ்வளவு நேர்த்தியாக வளர்க்கப் பட்டவள் என்பது எனக்குப் புரிந்தது.
click here to listen to Second paragraph
மாதத்தில் பாதி நாட்கள் எங்களில் யாரவது ஒருவருக்கு டெஸ்ட் இருக்கும் இரவு முழுவதும் விழித்திருந்தாலும் காலையில் எங்களை எழுப்பி காபி போட்டுத் தருவாள். அதையெல்லாம் நினைத்தால் இப்போதும் மனது வலிக்கிறது. அம்மாவிற்கு அடிக்கடி தலை வலி வரும் ஒரு சாரிடோனையோ ஆஸ்பிரினையோ சாப்பிட்டு விட்டு வாந்தி எடுத்து விட்டு இரவு சாப்பிடாமலேயே உறங்கி விடுவாள் காலையில் மறுபடி சமையல் வேலையை ஆரம்பித்து விடுவாள். அம்மா அப்பா இருவருக்குமே பக்தி அதிகம் ஸ்லோகம் சொல்லிக் கொண்டேதான் அம்மா வேலை செய்வாள் எங்களுக்கு லீவு விட்டால் எங்களிடம் ஆளுக்கு ஒரு . ஸ்லோகப் புத்தகம் கொடுத்துப் படிக்க வைப்பாள். லட்சுமி அஷ்டகம், லட்சுமி ஸ்தோத்திரம், கிருஷ்ணாஷ்டகம், துளசி ஸ்தோத்திரம், ஸ்ரீ ஸ்துதி, திருப்பாவை, சுப்ரபாதம் எல்லாமே அப்போதே அம்மாவால் எங்களுக்கு மனப்பாடம் ஆகி விட்டன. இப்போதும் தினமும் சொல்கின்றோம். மார்கழி மாதம் வந்தால் எல்லோரும் கண்டிப்பாக திருப்பாவை சொல்ல வேண்டும். அம்மாவைப் பொறுத்தவரை எல்லோரையும் எந்த வித்தியாசமும் காட்டாமல் வழி நடத்தினாள். அம்மாவிற்கு புத்தகங்கள் பத்திரிகைகள் படிப்பதில் அதிக ஆர்வம் உண்டு. விகடன், கல்கி நாங்கள் வாங்குவோம்.. ஆசிரியை லட்சுமி அம்மாவிற்குப் பிடித்த எழுத்தாளர். தொடர்கதைகளை அழகாக பைண்ட செய்து வைப்பாள் லீவு விட்டவுடன் அவற்றை நாங்கள் ஆவலோடு படிப்போம். சாதாரண நாட்களில் பாடம் படிக்க மட்டுமே அனுமதி. ஆனால் லீவு நாட்களில் நாவல்கள் படிப்பதை அம்மா பொருட்படுத்த மாட்டாள். அப்போதெல்லாம் வேறு என்டர்டெய்ன்மெண்டும் கிடையாது.
click here to listen to Third paragraph
அம்மாவிற்கு எல்லாவற்றிலும் ஆர்வம் உண்டு இயற்கையை ரசிப்பாள் Gardening-ல் மிகப் பிரியம் பாராட்டுவதில் கஞ்சத்தனம் கிடையாது புதிதாக ஏதாவது யார் வாங்கி வந்தாலும் உடுத்தி இருந்தாலும் மனம் விட்டுப் பாராட்டுவாள் தான் வாழ்ந்த எல்லா வீடுகளிலும் பக்கத்தில் குடியிருந்தவர்களுக்கெல்லாம் சிறந்த தோழியாக இருந்தாள் அம்மா. கூட்டுக குடும்பத்திலிருந்து நாங்கள் தனியாக வர வேண்டியிருந்தது அப்போது இருவருமே பணியில் இருந்ததால் குழந்தையை யார் பார்த்துக்கொள்வது என்ற கவலையில் இருந்தோம் நானிருக்க பயமேன் என்ற அம்மா தானாகவே முன்வந்து அன்பாக குழந்தையை கவனித்துக் கொண்டது என்னால் வாழ்க்கை முழுதும் மறக்க முடியாது. குழந்தைகளுடன் கேரம் சீட்டு செஸ் எல்லாம் விளையாடுவாள் குழந்தைகளைப் பார்த்தவுடன் அம்மாவுக்கு எவ்வளவு சந்தோஷமோ அதே அளவு குழந்தைகளுக்கும் அம்மாவைப் பார்த்தவுடன் சந்தோஷமாக இருக்கும். அம்மாவின் சமையல் எனக்கு மிகவும் பிடிக்கும் அதுவும் குறிப்பாக மணத்தக்காளி போட்ட வெந்தயக் குழம்பு, புதினா துவையல், பொறித்த ரசம், உப்பப்பம், பாதுஷா இவையெல்லாம் இப்போது நினைத்தாலும் நாக்கில் நீர் வருகிறது. அம்மாவைப் பற்றி எவ்வளவோ எழுதலாம், ஒரு புத்தகமே எழுதலாம் அம்மா எங்களுக்காக உழைத்த உழைப்பு, அர்ப்பணிப்பு, செய்த தியாகங்கள் இவையெல்லாம் கணக்கில் அடங்காதவை. எங்கள் மீது மிகுந்த பாசம் வைத்திருந்த அப்பா அம்மா அண்ணா இவர்களின் ஆன்மாக்கள் நம்மை என்றென்றும் வழி நடத்தும்.
சூடாமணி
மே 10, 2021
BACK
|