|
எழுத ஆரம்பிக்கும் முன்னர் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகின்றேன். எல்லோரும் படிக்கும் ஒரு பதிவில் அண்ணாவைப் பற்றி அவன் என எழுதாலாமா என்ற ஐயம் எனக்கு வந்தது. நான் வாழ்க்கை முழுவதும் அண்ணாவை அழைத்த விதமே எழுதுவதுதான் சரி என எனக்குப் பட்டது. இது மரியாதை இல்லாத அவன் அல்ல. ஆண்டாளின் 'நாராயணனே நமக்கே பறை தருவான்' அல்லது பாரதியார் கண்ணனைக் குறித்து எழுதிய 'தீமை தன்னை விலக்கவுஞ் செய்குவான்; சிறுமை கொண்டொழித் தோடவுஞ் செய்குவான்' என்பது போல் பக்தி, அன்பு, பாசம், உரிமை எல்லாம் கலந்த அவன்.
அண்ணாவைப் பற்றி நினைத்தால் முதலில் என் மனதில் தோன்றுவது அவனதுஅறிவு, பொறுப்புணர்வு மற்றும் கடின உழைப்பு (Intelligence, Responsibility and Hard-working nature). ஐ பீ ஓ பரீட்சை பாஸ் செய்து அப்பாவிற்கு குண்டூருக்கு மாற்றலாகி விட்டது. நாங்கள் செய்யாறில் இருந்தோம். அப்போது அண்ணாவிற்கு பதினைந்து வயதுதான். ஆனாலும் குடும்பத்தின் முழுப் பொறுப்பையும் ஏற்றது மட்டுமல்லாமல் நன்றாகப் படிக்கவும் செய்தான். அப்போதெல்லாம் கரண்ட் கிடையாது. ஹரிக்கேன் விளக்கில்தான் படிக்க வேண்டும். பள்ளிக்குச் செல்வதுடன் கடைக்குச் சென்று சாமான்கள் வாங்கி வருவதும் அவன் தான். இந்த இடையூறுகளையெல்லாம் தாண்டி மாவட்ட முதல் மாணவனாக எஸ் எஸ் எல் சி பரீட்சையில் தேர்வு பெற்றான். இடையூறுகள் அவனைத் தொடர்ந்து கொண்டே இருந்தன. யூ பி ஸ் சி நேர்முகத் தேர்வுக்கு சென்றபோதும் என் அம்மாவின் மாமா பெண் வீட்டில் தங்குவதாக இருந்தான். அவன் டெல்லி சென்ற அதே நாள் அவள் கணவர் திடீரென இறந்து விட்டார். எப்படியோ அவன் தேர்வுக்கு சென்று தபால் துறையில் அதிகாரியாகச் சேர்ந்தான். வாழ்க்கையில் போராடி ஜெயித்தவன் அண்ணா.
தான் பெற்ற இன்பம் குடும்பமும் பெற வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் அவனுக்கு உண்டு. 1963ல் அவன் பயிற்சிக்கு மசூரி சென்றிருந்தபோது அம்மாவிற்கு ஒரு கடிதம் எழுதியிருந்தான். தான் சென்ற எல்லா இடங்களையும் விவரித்து அழகான தமிழில் ஒரு சுவாரஸ்யமான பயணக்கட்டுரை அது. எங்களுக்கெல்லாம் நாங்களே நேரில் பார்த்த மகிழ்ச்சி தந்தது அக்கடிதம்.
அண்ணாவிற்கு எல்லா சங்கீதமும் (கர்நாடக இசை, திரை இசை) பிடிக்கும். அவனுடைய திருமண ரிசப்ஷனில் நாதஸ்வர இசை ஏற்பாடு செய்திருந்தார்கள். வித்துவான் வெவ்வேறு பாடல்களை வாசித்துக் கொண்டிருந்தார். அப்போது அண்ணா எங்கள் மன்னி வீட்டிலிருந்து ஒருவரைக் கூப்பிட்டு அவரை 'ஒளி மயமான எதிர் காலம்' (பச்சை விளக்கு படத்தில் வரும் பாடல்) பாட்டு தெரிந்தால் வாசிக்கச் சொல்லுங்கள் என்றான். அவரும் சந்தோஷமாக வாசித்தார். மன்னியின் சகோதரிகளுக்கு மட்டுமன்றி அங்கே இருந்த எல்லோருக்கும் அண்ணாவின் நுணுக்கமான ஞானம் மற்றும் எந்த இடத்தில எது பொருத்தம் என்று தேர்ந்தெடுத்ததும் பிடித்தது.
பணியில் சேர்ந்த பின் நிறைய ஊர்களுக்கு அவனுக்கு மாற்றலானது. நான் குடும்பத்தோடு நிறைய ஊர்கள் - திருவனந்தபுரம், புவனேஸ்வர், பம்பாய், டெல்லி - சென்றிருக்கின்றோம். அண்ணா, மன்னி இருவருமே விருந்தோம்பலில் சிறந்தவர்கள். அவர்கள் புண்ணியத்தில் எங்களுக்கும் சுற்றிப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
அண்ணாவின் தமிழ் ஆர்வம் அனைவரும் அறிந்ததே. அதுவும் திருக்குறள், கம்ப ராமாயணம், பாரதியார் பாடல்களென்றால் அவனுக்கு நிறையவே பிடிக்கும். பணியிலிருந்து ஒய்வு பெற்று சென்னை வந்தபின் நல்ல தமிழைக் கேட்கும் சந்தர்ப்பங்களை அவன் தவற விட்டதில்லை. கம்பன் விழா, பாரதி விழா சென்னையில் எங்கு நடந்தாலும் போய் விடுவான். இவை தவிர கர்நாடக இசையிலும் அவனுக்கு நிறைய ஆர்வம் உண்டு. நல்ல கச்சேரிகள் எங்கு நடந்தாலும் ஆஜராகி விடுவான். செட்டி நாடு வித்யாஷ்ரம் - க்ரீன்வேஸ் ரோட்டில் சரியான வாகன வசதிகள் இல்லாத ஒரு டொக்கில் இருக்கும் அரங்கம். அங்கு கூட அவன் வருவான். மைலாப்பூர் பாரதீய வித்யா பவனில் நிறைய முறை நாங்கள் சந்தித்திருக்கின்றோம். ஆனால் எந்தக் கச்சேரியாக இருந்தாலும் 8.00 மணிக்குக் கிளம்பி விடுவான். கேட்டால் 'நம்மால் வீட்டில் இருப்பவர்களுக்கு கஷ்டம் வரக்கூடாது இல்லையா ? என்பான்.' அண்ணாவை வியாதி வீட்டில் முடக்கியபின் ஒவ்வொரு முறையும் பாரதீய வித்யா பவன் செல்லும்போது 'அண்ணாவால் வீட்டை விட்டு வர முடியவில்லையே' என்று நினைத்து வேதனைப்படுவேன் , எரிச்சல் கூட வரும்.
யார் வந்தாலும் மகிழ்ச்சியுடன் வரவேற்று பேசிக்கொண்டிருப்பான், இவ்வளவு வருடங்களில் ஒரு முறை கூட தன் வியாதி பற்றியோ தான் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாதது பற்றியோ அலுத்துக் கொண்டது கிடையாது, அதை பற்றி பேசியது கூடக் கிடையாது. நாங்கள்தான் பெருமாள் ஏன் இவனுக்கு இவ்வளவு கஷ்டம் கொடுக்கிறார் என்று புலம்புவோம். ஆனால் புத்தகங்கள் நிறைய படிக்கும் பழக்கம் இருந்ததால் பொழுது போவது அவனுக்கு பிரச்சினையாக இருந்ததில்லை. அவன் கட்டிலில் நிறைய புத்தகங்கள் இறைந்து கிடக்கும். என் கணவரின் நண்பர் எல்லா ஆங்கிலப் பத்திரிகைகளும் வாங்குவார். படித்த பின் என் கணவரிடம் தருவார். அவர் படித்து முடித்தபின் அண்ணாவிடம் தந்து விடுவோம். இவற்றுடன் துக்ளக்கும் நான் எடுத்துக் கொண்டு போ ய் கொடுக்கும்போது ஒரு புதையல் கிடைத்த ஆனந்தம் அவனுக்கு உண்டாகும். எல்லாவற்றையும் படித்தபின் அடுத்த issues எடுத்துச் செல்லும்போது பொறுப்புணர்வுடன் முன்பு நான் கொடுத்ததை எல்லாம் திருப்பித் தருவான்.
அண்ணாவின் ஊக்கம், சந்தானம் மற்ற எல்லோருடைய முயற்சியால் எங்கள் பெற்றோர் பெயரில் ஜெயலட்சுமி ரங்கநாதன் டிரஸ்ட் ஆரம்பிக்கப் பட்டது. அது அண்ணாவிற்கு மகிழ்ச்சியைத் தந்த ஒரு விஷயம். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அண்ணா வீட்டிற்கு டிரஸ்ட் மீட்டிங்கிற்காக செல்வோம். 3 மணிக்குத்தான் மீட்டிங் என்றாலும் காலையிலிருந்தே அவனுக்கு உற்சாகம் வந்து விடும். நன்றாக டிரஸ் செய்து கொண்டு நெற்றியில் ஸ்ரீசூர்ணத்துடன் கம்பீரமாக வீல் சேரில் அமர்ந்திருப்பான். எங்களைப் பார்த்தவுடன் அவன் முகம் மலர்ந்து விடும், தன்னுடைய ட்ரேட்மார்க் சிரிப்புடன் வரவேற்பதே ஒரு அழகு. மன்னி சொல்வார்,' காலையிலிருந்தே அவருக்கு இருப்பு கொள்ளவில்லை. எப்போதடா மூன்றாகும் என்று காத்துக் கொண்டிருக்கிறார்.' அதை நினைக்கும்போதே மனம் நெகிழ்கிறது.
அண்ணாவின் கடைசி மாதங்கள் துயரமானவை. ஒரு ஆஸ்பத்திரியிலிருந்து மற்றொன்று என்று அவன் அலைந்ததை நினைத்தால் மனது வெடித்துவிடும் போல இருக்கிறது. கடைசியாக அதுல்யாவில் அவனைப் பார்க்க நாங்கள் போனபோது கூட அவனது விருந்தோம்பல் குணம் போகவில்லை. 'ஜகன், இவாளுக்கு ஏதாவது ஜூஸ் கிடைக்குமா பார்' என்றான். 'தன்னால் ஒன்றும் சாப்பிட முடியாது என்றபோதும் மற்றவர்கள் நலனையே யோசிக்கும் அவனுக்கு என் இவ்வளவு பெரிய துன்பம்? கடவுள் ஏன் அவனுக்கு இவ்வளவு கஷ்டம் கொடுத்தார் என்பது பதில் கிடைக்காத கேள்வி.

எங்கிருந்தாலும் நம் எல்லோருக்கும் அவன் ஆசீர்வாதம் நிச்சயம் உண்டு.
சூடாமணி
மே 17, 2021
BACK
|