அன்புள்ள அம்மா, அம்ருதா எழுதியது by Amritha Parthasarathy (From the Edition of Newsletter published in September 2001)


This letter was written by Amritha to her mother in August 2001 after we visited Bangalore and Usoor. Typing in MS-Word was no problem. But converting it to html for the website was a problem in 2001. There were a large number of Tamil fonts without any standardisation. The font used had to be installed by the reader in his computer. Otherwise only junk would be displayed. Unicode developed for all world languages by a California-based organisation was adopted for Tamil in 2002 when Microsoft installed it as a Windows font. G-mail included it soon therafter. I have been using Unicode from 2008 in the Newsletter and to compile cryptic crosswords in Tamil. In 2001, for proper display, I had converted each para as a jpg image file. In this issue I have retyped the whole letter as a Unicode file. - Parthasarathy

அன்புள்ள அம்மா
அம்ருதா எழுதியது நானும் இவரும் திங்களன்று (ஆகஸ்ட் 20ந் தேதி) மும்பையிலிருந்து கிளம்பி அடுத்த நாள் பெங்களூர் வந்தோம். நேரே மாது வீட்டுக்கு சென்றோம். எல்லோருக்கும் சாக்லேட் போட்ட பால் கேக்கும் கடாரங்காய் ஊறுகாயும் செய்து எடுத்து வந்தேன். ருக்கு அக்கா அத்திம்பேரை அங்கு பார்த்தது மகிழ்ச்சியாக இருந்தது. ருக்கக்கா பிரமாதமாக ஆனியன் பகோடா செய்வது உனக்குத் தெரியும? எங்களுக்கு அன்றுதான் தெரியும். அன்று மாலை நான், ருக்கக்கா , இவர் மூவரும் ஆர்த்தி இருக்குமிடம் சென்றோம்.

ஒன்றரை மாதத்துக்குள் ஆர்த்தி நிறைய drawing, painting செய்துள்ளாள். Creative writing என்று நிறைய எழுதியுள்ளாள். மிக நன்றாக எழுதியிருக்கிறாள் அவளுடைய ஆசிரியரும் இவள் நன்றாக எழுதுகிறாள் என்று பாராட்டியுள்ளார். ஆனால் room தான் கொஞ்சம் குப்பையாக இருந்தது. பிறகு ஆர்த்தியின் local guardian Mrs சந்தியா ஷங்கர் வீட்டிற்கு சென்று டீ சாப்பிட்டு விட்டு ஆர்த்தியையும் அழைத்துக்கொண்டு திரும்பினோம். அன்றிரவு மாது வீட்டில் அனைத்துத் தமிழ் மக்களும் செய்யும் காரியத்தை நாங்களும் செய்தோம் (சித்தி மற்றும் என்னவெல்லாம் சீரியல்கள் உண்டோ அவையெல்லாம் பார்ப்பது).

ஆகஸ்ட் 22ந் தேதி காலை 6.15 மணிக்கே கிளம்பி (ஆர்த்தியை கொஞ்சம் கஷ்டப்பட்டு எழுப்பி) 6.40க்கு லால்பாக் எஸ்பிரெஸ்ஸைப் பிடித்தோம். 9.40க்கு காட்பாடி செல்ல வேண்டிய ரயில் 40 நிமிஷம் தாமதமாகச் சென்றது. ஹேமா வழிமேல் (வண்டிமேல்!) விழி வைத்துக் காத்திருந்தாள். வழியிலே ஒரு ஹோட்டலில் (ஹரிஷ் ஹோட்டல்) டிபன் (நானும் ஹேமாவும் ஆப்பம், இவர் பூரி, ஆர்த்தி மசாலா தோசை), காபி சாப்பிட்டு விட்டு 11.30 மணிக்கு வீடு சேர்ந்தோம். மதியம் ஹேமாவின் சூப்பர் சமையலை (குறிப்பாக ரசம்) சாப்பிட்டோம். கொஞ்ச நேரம் சீட்டு விளையாடி விட்டு பிள்ளையாரை கவனிக்க ஆரம்பித்தோம். கொழுக்கட்டை செய்த பிறகு மாடி (ஹேமாவின் இரண்டாவது வீடான பேங்க்) மற்றும் கீழேயும் பூஜை செய்தோம். இரவு கொழுக்கட்டை, சாண்ட்விச், தயிர் சாதம் சாப்பிட்டோம்.பார்க்கும்படியாக சினிமா ஓடாததால் டென்ட் கொட்டகைக்கு இம்முறை செல்லவில்லை.

ஆகஸ்ட் 23ந் தேதி காலை ஏலகிரி செல்ல ஹேமா கார் ஏற்பாடு செய்திருந்தாள் காலை டிபனுக்கு நூடுல்ஸ் செய்தோம். கார் லேட்டாக வந்ததால் கிளம்ப 11 மணி ஆகி விட்டது. ஊசூரிலிருந்து 10 கிமீ சுழி ரோட்டில் சென்று பின்னர் சென்னை பெங்களூர் ரோட்டில் சென்றால் வாணியம்பாடி வரும் அங்கிருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் 15 கிலோமீட்டரில் ஏலகிரி மலை அடிவாரம் உள்ளது. பிறகு மலைப்பாதையில் 14 கிமீ செல்ல வேண்டும் (மொத்தம் 90 கிமீ).

மலைப் பாதையில் 14 ஹேர்பின் வளைவுகள் உள்ளன. ஒவ்வொரு வளைவுக்கும் தமிழ்க் கவிகள் (பாவேந்தர், பாரதியார், திருவள்ளுவர், ஔவையார், கம்பர், இளங்கோ, கபிலர்) மற்றும் கொடை வள்ளல்கள் (பாரி, காரி, ஓரி, பேகன், அதியமான், ஆம், நள்ளி) என அழகாகப் பெயர் வைத்திருக்கிறார்கள். இவர்களில் ஆம், நள்ளி குறித்து நான் கேள்விப் பட்டதில்லை.

3000 அடி உயரத்தில் இருக்கும் இம்மலையை ஏழைகளின் ஊட்டி என்பார்களாம். (ஏலக்காய் இங்கு கிடையாது. பெயர்க் காரணம் யாருக்கும் தெரியவில்லை. மலையை யாராவது ஏலத்தில் வாங்கியிருப்பார்கள் என்று இவர் தமாஷாகச் சொன்னார்). ஏரியில் போட்டிங் செய்தோம். ஏரியைச் சுற்றி தோட்டம் அழகாக இருக்கிறது. சிறிய zoo இருக்கிறது. அதில் மலைப்பாம்பு, மான்கள், வான்கோழி மற்றும் சில பறவைகள் உள்ளன. எங்களைப் பார்த்த சந்தோஷத்தில் வான்கோழி தோகை விரித்தாடியது. அங்கேயே ஒரு ஹோட்டலில் லஞ்ச் சாப்பிட்டு விட்டு வீடு திரும்பும்போது ஆறரை ஆகி விட்டது. இரவு பொங்கல் சட்னி தயிர் சாதம் செய்து சாப்பிட்டோம்.

ஆகஸ்ட் 24ந் தேதி காலை ஹேமாவின் ஆஸ்தான ஆட்டோவில் குடிசை என்கிற கிராமத்திற்குச் சென்றோம். அங்கு ரோஜா, முல்லை, கனகாம்பரம். வாடாமல்லி செடிகளை பயிர் செய்கிறார்கள். 1 மணி நேரம் அங்கிருந்தோம். சில செடிகளின் கட்டிங் மும்பைக்கு எடுத்துச் செல்வதற்காக வாங்கினேன். கிளம்புவதற்கு முன்பே அடைக்கு அரைத்து வைத்து வந்த பின் வார்த்து சாப்பிட்டோம். பிறகு ஆர்த்திக்கு (+ஹேமாவிற்கும், மாதுவிற்கும்) மைதா சிப்ஸ் செய்தேன்.

எங்கள் ட்ரெயின் மதியம் 3.20க்கு காட்பாடியிலிருந்து கிளம்புவதால் நாங்கள் 2.10க்கு கிளம்பி ஸ்டேஷன் சென்றோம். இரவு 7.50க்கு பெங்களூர் போய்ச் சேர்ந்தோம். அன்று மாதுவின் வீட்டில் தங்கினோம். இரண்டு நாட்கள் போனதே தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை ,'ஊட்டி இனிது கோடை இனிது என்பர் ஹேமாவின் ஊசூரையும் ஏலகிரியையும் காணாதவர்.'

ஆகஸ்ட் 25ந் தேதி இன்டர்நெட் சென்டர் மற்றும் கடைக்கு சென்றோம். 2வது டெஸ்டில் இந்தியா ஜெயித்ததை பார்த்தோம். மாலை ஆர்த்தியை அவள் வீட்டில் விட்டபின் இரவு 8.30 மணிக்கு உத்யான் எக்ஸ்பிரஸ் ட்ரெயினில் கிளம்பினோம். ஆகஸ்ட் 26ந் தேதி இரவு மும்பை வந்தோம். பிரயாணம் சவுகரியமாக இருந்தது

கிட்டத்தட்ட 50 நாட்களுக்குப் பின் ஆர்த்தியைப் பார்த்தது மகிழ்ச்சியாக இருந்தது. அவள் படிப்பு அவளுக்குப் பிடித்திருப்பதில் கூடுதல் மகிழ்ச்சி.

அப்பாவுக்கு அன்பு வணக்கம்.

இப்படிக்கு
அன்புடன்
அம்ருதா
ஆகஸ்ட் 29, 2001



BACK