| |
ஆகஸ்ட் 2001-ல் நான், அம்ருதா பெங்களூரில் ஆர்த்தியையும் ருக்குவையும் ஊசூரில் (வேலூருக்கருகில்) ஹேமாவையும் பார்த்துவிட்டு பெங்களூர் மறுபடி வந்து மும்பை திரும்பினோம். அப்பயணம் பற்றி அம்ருதா தன் அம்மாவிற்கு எழுதிய கடிதம். - பார்த்தசாரதி
அன்புள்ள அம்மாவிற்கு
அம்ருதா எழுதியது. நானும் இவரும் திங்களன்று (ஆகஸ்ட் 20-ந் தேதி) மும்பையிலிருந்து கிளம்பி அடுத்த நாள் பெங்களூர் வநதோம். நேரே மாது வீட்டிற்கு சென்றோம். எல்லோருக்கும் சாக்லேட் போட்ட பால்கேக்கும் கடாரங்காய் ஊறுகாயும் செய்து எடுத்து வந்தேன். ருக்கு அக்கா அத்திம்பேரை அங்கு பார்த்தது மகிழ்ச்சியாக இருந்தது. ருக்கக்கா பிரமாதமாக ஆனியன் பக்கோடா செய்வது உனக்குத் தெரியுமா? எங்களுக்கு அன்றுதான் தெரியும். அன்று மாலை நான், ருக்கக்கா, இவர் மூவரும் ஆர்த்தி இருக்குமிடம் சென்றோம்.
ஒன்றரை மாதத்திற்குள் ஆர்த்தி நிறைய drawing, painting செய்துள்ளாள். நிறைய நாட்கள் இரவு 2 மணி வரை homework செய்வதுண்டாம். ஒரு நாள் தூங்கவேயில்லையாம். Creative writing என்று நிறைய எழுதியுள்ளாள். மிக நன்றாக எழுதி இருக்கிறாள். அவளுடைய ஆசிரியரும் இவள் நன்றாக எழுதுகிறாள் என பாராட்டியுள்ளார். ஆனால் roomதான் கொஞ்சம் குப்பையாக இருந்தது. பிறகு ஆர்த்தியின் local guardian ஆன Mrs. Sandya Shankar வீட்டிற்கு சென்று டீ சாப்பிட்டு விட்டு ஆர்த்தியையும் அழைத்துக் கொண்டு திரும்பினோம். அன்றிரவு மாது வீட்டில் அனைத்துத் தமிழக மக்களும் செய்யும் காரியத்தை நாங்களும் செய்தோம் (சித்தி மற்றும் என்னவெல்லாம் சீரியல்கள் உண்டோ அதையெல்லாம் பார்ப்பது).
ஆகஸ்ட் 22-ந் தேதி காலை 6.15 மணிக்கே கிளம்பி (ஆர்த்தியை கொஞ்சம் கஷ்டப்பட்டு எழுப்பி) 6.40 க்கு லால்பாக் எக்ஸ்பிரஸைப் பிடித்தோம். 8.40க்கு காட்பாடியை அடைய வேண்டிய வண்டி 40 நிமிஷம் தாமதமாக வந்தது. ஹேமா வழிமேல் (வண்டிமேல்!) விழி வைத்துக் காத்திருந்தாள். வழியிலேயே ஒரு ஹோட்டலில் நானும் ஹேமாவும் ஆப்பம், இவர் பூரி, ஆர்த்தி மசாலா தோசை) காஃபி சாப்பிட்டு விட்டு 11 மணிக்கு வீடு வந்தோம். மதியம் ஹேமாவின் சூப்பர் சமையலை (குறிப்பாக ரசம்) சாப்பிட்டோம். கொஞ்ச நேரம் சீட்டு விளையாடிவிட்டு பிள்ளையாரை கவனிக்க ஆரம்பித்தோம். கொழுக்கட்டை செய்த பிறகு மாடி (ஹேமாவின் இரண்டாவது வீடான பேங்க்) மற்றும் கீழேயும் பூஜை செய்தோம். இரவு கொழுக்கட்டை, sandwichஉடன் தயிர் சாதம் சாப்பிட்டோம். பார்க்கும்படியான சினிமா ஓடாததால் இம்முறை டெண்ட் கொட்டகைக்கு செல்லவில்லை.
ஆகஸ்ட் 23-ந் தேதி காலை ஏலகிரி செல்ல ஹேமா கார் ஏற்பாடு செய்திருந்தாள். காலை டிஃபனுக்கு நூடில்ஸ் செய்தோம். கார் லேட்டாக வந்ததால் கிளம்ப 11 மணி ஆகி விட்டது. ஊசூரிலிருந்து 10 கிமீ சுழி ரோடில் சென்றபின் சென்னை - பெங்களூர் நெடுஞ்சாலையில் 50 கிமீ சென்றால் வாணியம்பாடி வரும். அங்கிருந்து திருப்பத்தூர் சாலையில் 15 கிமீ தூரத்தில் ஏலகிரி மலை அடிவாரம் இருக்கிறது. பிறகு மலைப்பாதையில் 14 கிமீ செல்ல வேண்டும். (மொததம் 90 கிமீ).
மலைப்பாதியில் 14 hairpin வளைவுகள் உள்ளன. ஒவ்வொரு வளைவுக்கும் தமிழ்க் கவிகள் (பாவேந்தர், பாரதியார், திருவள்ளுவர், அவ்வையார், கம்பர், இளங்கோ, கபிலன்) மற்றும் கொடை வள்ளல்கள (பாரி, காரி, ஓரி, பேகன், அதியமான், ஆய், நள்ளி) என அழகாகப் பெயர் வைத்திருக்கிறார்கள்.
3000 அடி உயரத்தில் இருக்கும் இம்மலையை ஏழைகளின் ஊட்டி என்பார்களாம். (ஏலக்காய் இங்கு கிடையாது. பெயர்க் காரணம் யாருக்கும் தெரியவில்லை. மலையை யாராவது ஏலத்தில் வாங்கியிருப்பார்கள் என்று இவர் தமாஷாக சொன்னார்.) ஏரியில் போட்டிங் செய்தோம். ஏரியைச் சுற்றி தோட்டம் அழகாக இருக்கிறது. சிறிய zoo இருக்கிறது. அதில் மான்கள், மலைப்பாம்பு, வான்கோழி மற்ும் சில பறவைகள் இருக்கின்றன. எங்களைப் பார்த்த சந்தோஷத்தில் வான்கோழி தோகை விரித்தாடியது. அங்கேயே ஒரு ஹோட்டலில் லஞ்ச் சாப்பிட்டு விட்டு வீடு வரும்போது 6.30 மணி ஆகிவிட்டது. இரவு பொங்கல், சட்னி, தயிர்சாதம் செய்து சாப்பிட்டோம்.
ஆகஸ்ட் 24ந் தேதி காலை ஹேமாவின் ஆஸ்தான ஆட்டோவில் குடிசை எனும் கிராமத்திற்கு சென்றோம். அங்கு ரோஜா, முல்லை, கனகாம்பரம், வாடாமல்லி செடிகளை பயிர் செய்கிறார்கள். 1 மணி நேரம் அங்கிருந்தோம். சில செடிகளின் கட்டிங் மும்பைக்கு எடுத்துச் செல்கிறேன். கிளம்புவதற்கு முன்பே அடைக்கு அரைத்து வீடு சேர்ந்தபின் வார்த்து சாப்பிட்டோம். பிறகு ஆர்ததிக்கு (ஹேமாவிற்கும்தான்) மைதா சிப்ஸ் செய்தேன்.
எங்கள் வண்டி காட்பாடியிலிரூந்து 3.20க்கு கிளம்புவதால் நாங்கள் 2.10க்கே கிளம்பி ஸ்டேஷன் சென்றோம். இரவு 7.50க்கு பெங்களூர் போய் சேர்ந்தோம். அன்று மாதுவின் வீட்டில் இருந்தோம.
2 நாட்கள் போனதே தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை 'ஊட்டி இனிது, கோடை இனிது என்பர் ஹேமாவின் ஊசூரைப் பாராதவர்.' ஆகஸ்ட் 25ந் தேதி internet centre மற்றும் கடைக்குச் சென்றோம். 2-வது டெஸ்டில் இந்தியா ஜெயித்ததைப் பார்த்தோம். மாலை ஆர்த்தியை அவள் வீட்டில் விட்டபின் இரவு 8.30க்கு உத்யான் எக்ஸ்பிரஸில் நாங்கள் கிளம்பினோம். ஆகஸ்ட் 26 இரவு மும்பை வந்து சேர்ந்தோம்.
பயணம்்சௌகரியமாக இருந்தது. கிட்டத்தட்ட 50 நாட்களுக்குப் பிறகு ஆர்த்தியை பார்த்தது மிக மகிழ்ச்சியாக இருந்தது. அவள் படிப்பு அவளுக்குப் பிடித்திருப்பதில் கூடுதல் மகிழ்ச்சி.
அப்பாவிற்கு நமஸ்காரம்.
அன்புடன்
அம்ருதா
|